அரும்பொருளகம் சார்ந்த கற்றல் திட்டம்  

அக்கால சிங்கப்பூரில் உங்கள் வீடு தேடி வரும் பால் புத்தம்புதியதாக இருப்பதைச் சிலர் எப்படி உறுதி செய்தார்கள்? மிகவும் சுலபம். கதவைத் திறந்து பார்த்தால் போதும். பசுமாடு வளர்ப்பவர்கள், சில சமயங்களில், வாடிக்கையாளரின் வீட்டுக்கே மாடுகளை ஓட்டிச்செல்வார்கள். மாடுகள் புல் மேய்கையில், பால்காரர்கள் பால் கறந்து வாடிக்கையாளர்களிடம் கொடுப்பார்கள்.

இந்திய மரபுடைமை நிலையத்தில் நமது கடந்தகாலத்தைக் காட்சிப்படுத்திக் காட்டும் பல்வேறு சிறப்பம்சங்களில் ஆளுருவப் பால்காரரும் ஒருவர். பள்ளி சிற்றுண்டிச்சாலையில் அல்லது பேரங்காடியில் மட்டுமே பால் வாங்கியிருக்கக்கூடிய இளம் வருகையாளர்களைப் புதுமையான முறையில் வரலாற்றுடன் இணைக்கிறது இந்த உருவம்.

இதனைக் கருத்தில் கொண்டு, நாடளாவிய அரும்பொருளகம் சார்ந்த கற்றல் திட்டத்தின் ஒரு பகுதியாக, கல்வி அமைச்சுடன் சேர்ந்து தொடக்கநிலை 5ஆம் வகுப்பு மாணவர்களுக்காகச் சிறப்புக் கற்றல் திட்டத்தைக் கூட்டாகத் தயாரித்திருக்கிறோம்.

சிறுவர்களின் கருத்தைக் கவரப், பயிற்சி பெற்றுள்ள எங்களது ஆர்வமிக்க அரும்பொருளகக் கல்வியாளர்கள், சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் கலாசாரத்திலும் மரபுடைமையிலும் கருத்தார்ந்த அம்சங்களையும் உட்கருத்துகளையும் புகுத்தி, ஏழு மையங்களிலும் அத்தியாவசியமான படிப்பினைகளை மனதில் பதிய வைப்பார்கள். இந்தப் பல்லுணர்வு கற்றல் அனுபவத்தில், நேரடியாகச் செய்துபார்க்கும் நடவடிக்கைகள், தொட்டுணரும் பொருட்கள் போன்றவற்றுடன் கதைசொல்லும் அங்கமும் உள்ளடங்குகிறது.

தேசியக் கல்வி, சமூகக் கல்வி (தொடக்கநிலை 5) பாடத்திட்டத்திற்குத் துணையாகத் தயாரிக்கப்பட்ட இந்தக் கற்றல் திட்டத்தில், உயிர்த்துடிப்புமிக்க கேம்பல் லேன் வழியாக மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்தப் பயணத்தின்போது, முக்கிய இடங்களில் நிறுத்தங்கள் இருக்கும். நீண்டகாலமாக இந்த வட்டாரத்தில் நீடித்திருக்கும் தொழிற்களையும் வணிகங்களையும் பற்றி மாணவர்களிடம் எடுத்துச் சொல்லப்படும். இன்னும் பல விறுவிறுப்பான அம்சங்களும் இதில் இடம்பெறும்.

முடிவில், சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்கு இந்திய சமூகம் அளித்த பங்களிப்பைப் பற்றியும் பன்மயக் கலாசார ஒத்திசைவு பற்றியும் ஆழ்ந்த புரிந்துணர்வோடு மாணவர்கள் விடைபெறுவார்கள்.

உங்கள் வருகைக்குப் பதிவு செய்யுங்கள்

எங்கள் அரும்பொருளகம் சார்ந்த கற்றலில் கலந்துக்கொள்ள, தேசிய மரபுடைமைக் கழகத்தின் BookMuseums தளத்தின் வாயிலாக ஆசிரியர்கள் பதிவு செய்யலாம். குறைந்தது 6 வாரங்களுக்கு முன்னதாகப் பதிவு செய்யவேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். உங்களுக்குத் தொழில்நுட்ப உதவி தேவைப்பட்டால், NHB_Digital_Services@nhb.gov.sg எனும் மின்னஞ்சல் முகவரியில் எங்கள் குழுவினருடன் தொடர்பு கொள்ளுங்கள்.

மேல்விவரங்களுக்கு, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை இங்கே படிக்கலாம். எங்கள் அரும்பொருளகம் சார்ந்த கற்றல் திட்டத்தைப் பற்றி மேல் விவரம் பெற, NHB_IHC@nhb.gov.sg முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.