குழுப் பதிவு
15 பேருக்கும் அதிகமானோர் அடங்கிய குழுவாக வருகை புரிய விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். உங்கள் வருகையை திட்டமிடுவதற்கான சில வழிமுறைகள் கீழே தரப்பட்டுள்ளன. அவற்றைப் படித்துவிட்டு குழுப் பதிவைச் செய்யுங்கள்.
குழுப் பதிவு செய்ய, குழுப் பதிவுப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பின்னர் NHB_IHC@nhb.gov.sg என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
உங்கள் வருகையைத் திட்டமிடல்
எல்லா குழுப் பதிவுகளும் வருகைக்கு குறைந்தது மூன்று வாரத்திற்கு முன்பு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
தனியார் வழிகாட்டி சுற்றுலாக்கள்
வழிகாட்டிச் சுற்றுலா சுமார் 60 நிமிடங்கள் நீடிக்கும்.
ஒரு வழிகாட்டியின் சுற்றுலாவில் கூடுதல் பட்சமாக 15 வருகையாளர்கள் கலந்து கொள்ளலாம்.
வழிகாட்டிகள் இருப்பதைப் பொறுத்து வழிகாட்டிச் சுற்றலாக்கள் நடத்தப்படும்.
முதல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு வழிகாட்டிக்கான கட்டணம் 150 வெள்ளி. கோரிக்கையின் பேரில் நேரத்தைக் கூட்டிக் கொள்ளலாம். ஒவ்வொரு கூடுதல் மணி நேரத்திற்கும் அல்லது குறைவான நேரத்திற்கும் ஒவ்வொரு வழிகாட்டிக்கும் 75 வெள்ளி கட்டணம் வசூலிக்கப்படும்.
வழிகாட்டிச் சுற்றுலாவுக்கு நேரத்தோடு வந்து விடுங்கள். கொடுக்கப்பட்ட நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு மேல் தாமதமாக வந்தால் சுற்றுலா ரத்து செய்யப்படும்.
வருகைக்கு 24 முதல் 72 மணி நேரத்திற்குள் அதனை ரத்து செய்தால், வழிகாட்டிக் கட்டணத்தில் 50 விழுக்காடு செலுத்த வேண்டும்.
வருகைக்கு 24 மணி நேரத்திற்குள் அதனை ரத்து செய்தால் வழிகாட்டிக் கட்டணத்தின் 100 விழுக்காட்டையும் செலுத்த வேண்டும்.
பொதுவிடுமுறை, அதற்கு முந்திய தினம், திறந்த இல்ல தினங்களில் வழிகாட்டி சுற்றுலாக்கள் இடம்பெறாது.
ஒலி, ‘உண்மைத் தோற்ற’ வழிகாட்டி
இந்திய மரபுடைமை நிலையத்தின் காட்சிக் கூடங்கள் ஒலி, ‘உண்மைத் தோற்ற’ வழிகாட்டிகள் மூலம் பார்வையிடப்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன. நுழைவுச் சீட்டுடன் கையடக்கக் கருவியை இலவசமாகப் பயன்படுத்தலாம்.
நிலையத்திற்கு வந்து சேர்வது
தனியார் பேருந்துகள் மூலம் வருவது
பேருந்தில் வருவோர் இந்த இடத்தில் இறக்கி விடுமாறு ஓட்டுநரிடம் சொல்லலாம். பேருந்துகள் கிளைவ் ஸ்ட்ரீட்டில் நிறுத்திவைக்க அனுமதிக்கப்பட மாட்டாது.
நுழைவுச் சீட்டுகளை வாங்குவதும் / பெற்றுக் கொள்வதும்
நிலையத்திற்கு வரும்போது முதல் தளத்தில் அமைந்துள்ள வருகையாளர் சேவைகள் முகப்புக்குச் சென்று நுழைவுச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம். பிரச்சினைகள் எழாதிருக்க உறுதி செய்யப்பட்ட மின்னஞ்சல் பிரதியைக் கொண்டு வாருங்கள்.
உங்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரத்திற்கு வருமாறு வலியுறுத்தப்படுகிறது. நீங்கள் தாமதமாக வந்தால் நேரத்தோடு வரும் மற்ற குழுக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நீங்கள் காத்திருக்க வேண்டி வரலாம்.
தாமதமாக வருவோர், கொடுக்கப்பட்ட நேரத்திற்குக் குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பு 6291 1601 என்ற எண்ணில் வருகையாளர் சேவைகள் முகப்பைத் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.
கட்டணம் செலுத்துவது
முதல் தளத்தில் உள்ள வருகையாளர் சேவைகள் முகப்புக்குச் சென்று உங்கள் நுழைவுச் சீட்டு, வழிகாட்டிக்கான கட்டணத்தைச் செலுத்துங்கள். பின்வரும் கட்டண முறைகள் ஏற்றுக்கொள்ளப்படும்:
- நுழைவுக் கட்டணம்: ரொக்கம்/ Nets/ Visa/ Mastercard
- வழிகாட்டிக் கட்டணம்: ரொக்கம் / Nets/ Visa/ Mastercard/ காசோலை
இந்திய மரபுடைமை நிலையத்தில்
நிலையத்திற்கு வரும் முன்பு என்ன செய்யலாம், செய்யக்கூடாது என்பதைத் தெரிந்து கொள்வது முக்கியம். உங்கள் அனுபவம் மகிழ்ச்சியான, பயனுள்ள ஒன்றாக அமைவதை அது உறுதி செய்யும்.
காட்சிக் கூடங்களில்
காட்சிக் கூடங்களில் உண்ணவோ அருந்தவோ கூடாது.
உணவுத் துகள்களும், பானத் துளிகளும் எறும்புகளையும் மற்ற பூச்சிகளையும் ஈர்க்கும். கைவினைப் பொருள்களுக்கு அது பெருத்த சேதத்தை உண்டு பண்ணும். அதேபோல் ஈரப்பதம் சில பொருள்களை சீர்கெடச் செய்யும்.
காட்சிக் கூடங்களைக் குப்பையின்றி வைத்திருக்க வேண்டும்
எந்த விதக் குப்பையும் உங்களுக்கும் மற்ற வருகையாளர்களுக்கும் ஆபத்தை உண்டு பண்ணலாம். அனைவரிடமும் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள்.
காட்சிக் கூடங்களில் மெதுவாகப் பேச வேண்டும், அமைதியாக நடக்க வேண்டும்.
போக்கிரித்தனமாக நடந்துகொண்டால் கைவினைப் பொருட்களுக்கு சேதம் ஏற்படலாம். முக்கியமாக உங்களுக்கும் மற்ற வருகையாளர்களுக்கும் காயம் ஏற்படலாம். சத்தமாக உரையாடுவது அமைதியைக் குலைப்பதோடு மற்ற வருகையாளர்களின் மகிழ்ச்சியையும் குலைக்கும்.
பொருட்களைக் சேதப்படுத்தாமல் கவனமாகப் பாருங்கள். அவற்றைத் தொடர்ந்து தொட்டு வந்தால் அவற்றுக்கு சேதம் ஏற்படலாம். அவை ஈடுசெய்ய முடியாதவை.
பெரும்பாலானவை அரிய பொருட்கள் என்பதால் அவை காட்சிப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருக்கும்.
தொடக்கூடிய (அறிகுறியிட்ட) பொருட்களை மட்டும் தொட்டுப் பார்க்கலாம்.
கருவிகளைக் கவனத்துடன் கையாளுங்கள்
இந்திய மரபுடைமை நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு வருகையாளருக்கும் கையடக்கக் கருவி விநியோகிக்கப்படும். அவற்றுக்குச் சேதம் ஏற்படாதவாறு கவனத்துடன் கையாளுங்கள்.
புகைப்படம், காணொலி
காணொலி எடுப்பதற்கு அனுமதி கிடையாது.
ஒளி இல்லாமல் புகைப்படம் எடுக்கலாம்.
தாள், துணி போன்ற மென்மையான பொருட்களுக்கு கேமரா ஒளி சேதம் உண்டாக்கக்கூடும். அவற்றின் வாழ்நாளும் குறையக்கூடும். ஆகையால் காட்சிக் கூடங்களின் சில பகுதிகளில் ஒளி குறைவாக இருக்கும். சந்தேகம் இருந்தால் எங்கள் அன்பான அரும்பொருளக அதிகாரிகளை அணுகுங்கள்.