அரும்பொருளகத்திற்கும் அப்பாற்பட்டது

சமூகத்தின் குரல்கள், நினைவலைகள், பங்களிப்புகள் – இவையே இந்திய மரபுடைமை நிலையத்தின் முக்கிய அம்சங்களாக அமைகின்றன. 2015 மே மாதம் திறக்கப்பட்ட இந்நிலையம், அன்றிலிருந்து இன்றுவரை வருகையாளர்களைக் கவர்ந்து வருகிறது.

எங்களது ஐந்து நிரந்தரக் காட்சிக்கூடங்களில் பொக்கி‌ஷமாகப் பாதுகாக்கப்படும் பரம்பரை சொத்துகள், ஆபரணங்கள் முதல் நாட்குறிப்புகள், குடும்பப் புகைப்படங்கள் வரை, சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் கதைக்கு உயிர்க்கொடுக்கும் கண்கவர் காட்சிப்பொருட்கள் நிறைந்துள்ளன. எங்களிடம் கிடைக்குமெனப் பலரும் அறிந்த சிந்திக்கத்தூண்டும் அனுபவத்தை அவை விவரிக்கும்.

எங்கள் நிலையத்திற்கு வருகை தருவோரின் பயணம் முதலாம் நூற்றாண்டிலிருந்து துவங்கும். தெற்குகாசியாவுக்கும் தென்கிழக்குகாசியாவுக்கும் இடையில் நிலவிய ஆரம்பகாலத் தொடர்புகள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அங்கிருந்து பன்முக இழைகளாக விரியும் கதையில், கண்டம்விட்டு கண்டம் சென்ற புலம்பெயர்ந்த மக்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்திய சிங்கப்பூரர்களையும், சிங்கப்பூருக்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்புகளையும் பற்றிய துணுக்குகளையும் கதைகளையும் நாங்கள் பகிர்கிறோம்.

நிலையத்தில் எங்களுடன் நீங்கள் செலவிடும் நேரத்திற்கு மதிப்பு சேர்க்கும் வகையில், முப்பரிமாண ஒளிப்படங்கள், மெய்நிகர் வழிகாட்டிகள், இருவழித்தொடர்பு விளையாட்டுகள் எனப் பலவும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, பின்னணி ஆய்வுகளின்மூலம் நாங்கள் கண்டறிந்த புதிய உட்கருத்துகளையும் நாங்கள் பகிர்கிறோம்.

தேசிய மரபுடைமைக் கழகத்தின் அரும்பொருளகக் கட்டமைப்பில் முக்கிய அங்கமாக இடம்பெற்றுள்ள இந்திய மரபுடைமை நிலையம், ஒரு அரும்பொருளகத்திற்கு அப்பாற்பட்டது. வசீகரிக்கும் படைப்புகள், நேரடியாக நடைபெறும் பயிலரங்குகள், சிந்திக்கத் தூண்டும் கருத்தரங்குகள், ஆற்றலளிக்கும் திறன் வகுப்புகள், விழாக்காலக் கொண்டாட்டங்கள் ஆகியவற்றை நீங்கள் எதிர்பார்க்கலாம்.

உங்களுக்கு நாங்கள் என்னவெல்லாம் வழங்குகிறோம் என்பதைக் காண வாருங்கள். நமது வேர்களை அரவணைத்து கௌரவிக்கையில், எங்கள் நடவடிக்கைகளிலும் பங்கெடுங்கள்!

எங்கள் கட்டடத்தின் விவரம்

நாங்கள் அமைந்திருக்கும் நான்கு மாடி கட்டடத்திற்குத் தனித்துவமான கவர்ச்சி உண்டு. இந்தக் கட்டடம் அக்கால நினைவுகளை எதிரொலித்து, இக்காலத்திற்கு உயிரூட்டுகிறது.

குறிப்பாக, கட்டடத்தின் வெளிமுகப்புத் தோற்றம் பல்வேறு காரணங்களால் புத்தாக்கத்துடன் கண்ணைக் கவரும்வண்ணம் காட்சி தருகிறது.

படிக்கிணற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டடத்தின் வெளிமுகப்பில் அமைக்கப்பட்டிருக்கும் வித்தியாசமான படிகள், முற்றங்கள் வாயிலாக வருகையாளர்கள் ஒரு காட்சிக்கூடத்திலிருந்து மற்றொரு காட்சிக்கூடத்திற்குச் செல்கையில், அக்கால இந்தியர்களின் “காலடிச்சுவடுகளில் நடக்கலாம்”. இந்தியா எங்கிலும் சமூகங்கள் ஒன்றுகூடும் இடமாகத் திகழும் படிக்கிணறு, அரண் போன்ற ஓரச்சுவருடன் தாழ்வான நீர்மட்டத்தை அடைய படிகளைக் கொண்டிருக்கும்.

பகலில் பளபளவென மின்னும் வெளிமுகப்பு, சிங்கப்பூர் வானையும் துடிப்பான சுற்றுப்புறத்தையும் பிரதிபலிக்கிறது.

இரவில் லிட்டில் இந்தியாவின் கண்கவர் சுவரோவியம்போல் வெளிமுகப்பு விளக்குகள் “ஒளிவீசும்” – மக்களின் மனங்கவர்ந்த, பாதுகாக்கப்பட்ட இவ்வட்டாரத்தின் பல்வண்ண வீதிகளுக்கு எங்களின் காணிக்கை இது.