தொண்டூழியராகச் சேருங்கள்

கருத்தைக் கவரும் காட்சிக்கூட உலாவில் வருகையாளர்களை அழைத்துச்சென்று வழிகாட்டுங்கள்

மனிதர்கள் காலங்காலமாகக் கதைகள் சொல்லி வருகிறார்கள். நம்முடைய கடந்த காலத்தைக் கதைகளாகச் சொல்லும்போது, நிகழ்கால வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைக்கிறது. அதே சமயத்தில், நமது எதிர்காலத்திற்கு வித்திடுவதற்கான ஆற்றலையும் வழங்குகிறது.

பல்வேறு தலைமுறையினருக்கும் நமது மரபுடைமையைப் பற்றி எடுத்துச்சொல்வதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? வருகையாளர்களை முதலாம் நூற்றாண்டு இந்தியாவில் தொடங்கும் காலப் பயணத்தில் அழைத்துச்சென்று, வழிகாட்டுங்கள். துணுக்குகள், சிந்தனையைத் தூண்டும் உட்கருத்துகள் ஆகியவற்றுடன், இந்திய மரபுடைமை நிலையத்தின் தனித்துவமான வரலாற்றுத் தொகுப்பை விவரிக்க உதவுங்கள்.

பின்வரும் வழிகாட்டி அமைப்புகளின் வாயிலாகத் தொண்டூழிய வழிகாட்டியாகச் சேர உங்களை வரவேற்கிறோம்:

  1. சிங்கப்பூரில் உள்ள அரும்பொருளகங்கள், மரபுடைமை அமைப்புகள் ஆகியவற்றுக்கு ஆதரவாக வழிகாட்டிச் சேவைகள் வழங்கும் லாப நோக்கற்ற அரும்பொருளக நண்பர்கள் (சிங்கப்பூர்) சங்கம் (Friends of the Museum).

    இந்தச் சங்கம், வார நாட்களில் எங்கள் நிலையத்தில் வழிகாட்டத் தொண்டூழியர்களுக்குப் பயிற்சி அளிக்கிறது. நீங்கள் சங்கத்தில் வழிகாட்டியாகச் சேர விரும்பினால், training@form.sg முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

  2. வார இறுதியிலும் பொது விடுமுறை நாட்களிலும் வருகையாளர்களுக்கு நிலையத்தைச் சுற்றிக்காட்ட ஆங்கிலம், தமிழ், மண்டரின் பேசும் வழிகாட்டிகளைச் சேர்க்கும் அரும்பொருளக வழிகாட்டிகள் (Museum Volunteers) குழு.

தொடர் கல்வியிலும், சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் கலை, வரலாறு, கலாசாரத்திலும் உங்களுக்கு ஆர்வமிருந்தால் இந்தக் குழுவில் சேருங்கள். மேல்விவரம் அறிய nhb_ihc@nhb.gov.sg முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.