நீரிணையின் செட்டி மலாக்கா – பெரனக்கான் இந்தியச் சமூகங்களை அறிந்திடுவோம்

இந்தியப் பெருங்கடலோரமும் தூரக் கிழக்கும் சந்திக்குமிடத்தில் அமைந்திருக்கும் மலாய் தீபகற்பம், பல கலாசாரங்களின் சங்கமமும் பன்மயமும் ஒருமிக்கும் வட்டாரமாக இருந்து வந்துள்ளது. இவ்வட்டாரத்தில் குடியேறிய ஏராளமான சமூகங்கள், தத்தம் சமூக-கலாசாரப் பழக்கங்களைத் தங்களுடன் எடுத்து வந்தனர். மொழி, சமயம், ஆடை அலங்காரம், சமையல்கலை முதலான பலவும் இதில் உள்ளடங்கும். இந்தப் பழக்கங்கள் காலப்போக்கில் உள்ளூர் சமுதாயத்தின் பன்மயக் கலாசாரங்களோடு ஒருங்கிணைந்து, பன்மொழிச் சூழலும் கலப்பின இயல்பும் ஒருமித்திருக்கும் சூழ்நிலை உருவானது. இதற்கான சிறந்ததோர் எடுத்துக்காட்டு செட்டி மலாக்கா.

செட்டி மலாக்கா (அல்லது சிட்டி மலாக்கா) என்றழைக்கப்படுவோர், மலாக்கா சுல்தான் ஆட்சிக் காலத்தின்போதும் (15-16ஆம் நூற்றாண்டு) அதற்குப் பிறகும் மலாக்காவில் குடியேறி, உள்ளூர் மலாய், சீனப் பெண்களைத் திருமணம் செய்துகொண்ட தமிழ் வணிகர்களின் வம்சாவளியினரைக் குறிக்கிறது. இந்து மதத்தின் சைவச் சமயத்தை (சிவனை வழிபடுவோர்) சேர்ந்தவர்களே இவர்களுள் பிரதானம். இச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மலாய், தமிழ், சீனம் ஆகிய மொழிகளைக் கலந்துபேசும் தனித்துவமிக்க மொழியைக் கல்விமான்கள் செட்டி கலப்புமொழி என்றழைக்கின்றனர். இவர்களின் முன்னோர்கள் மலாக்காவின் காஜா பெராங் வட்டாரத்தில் கம்போங் சிட்டி கிராமத்தில் வாழ்ந்து வந்தனர். சிங்கப்பூரில் சுமார் 5,000 செட்டி மலாக்கா மக்கள் இருப்பதாகக் கணிக்கப்படுகிறது.

இந்திய மரபுடைமை நிலையமும் சிங்கப்பூர் பெரனக்கான் இந்தியர் (சிட்டி மலாக்கா) சங்கமும் கூட்டிணைந்து, “நீரிணையின் செட்டி மலாக்கா – பெரனக்கான் இந்தியச் சமூகங்களை அறிந்திடுவோம்” என்ற தலைப்பிலான கண்காட்சியைப் பெருமையுடன் படைக்கின்றன. இந்திய மரபுடைமை நிலையம் சமூகத்துடன் கூட்டிணைந்து உருவாக்கிப் படைக்கும் முதல் கண்காட்சி இது. சிங்கப்பூரின் பலரும் அறியாத பெரனக்கான் இந்தியச் சமூகத்தையும் அவர்களைப் பற்றிய வசீகரிக்கும் கதைக்கூற்றையும் கண்டறியும் பயணத்தில் எங்களோடு சேர்ந்து வாருங்கள்.