சோழமண்டலக் கரை முதல் மலாக்கா நீரிணை வரை - நம் தமிழ் மரபு குறித்த மறுபார்வை

தமிழர்கள் சிங்கப்பூரில் இடையறாது வாழும் 200வது ஆண்டு இது. ஆயினும், சிங்கப்பூர்க் கல் குறித்த அண்மைக் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், சிங்கப்பூருக்கும் தமிழருக்கும் இடையில் 11-13ஆம் நூற்றாண்டுகளிலேயே தொடர்புகள் இருந்ததாகத் தெரிய வருகிறது. “சோழமண்டலம் முதல் மலாக்கா நீரிணை வரை - நம் தமிழ் மரபு குறித்த மறுபார்வை” கண்காட்சி, பண்டைக்காலத்திலிருந்து நிகழ்காலம் வரை தென்கிழக்காசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் அனுபவங்களைத் தொகுத்தளிக்கிறது.

தெற்காசிய மொழிகளில், தமிழ்மொழி ஒன்றுதான் இன்றுவரை தென்னிந்தியாவிலும், இலங்கையிலும், உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் புலம்பெயர்ந்த மக்களிடையே தாய்மொழியாகத் தழைத்து நிற்கும் மிகத் தொன்மையான மொழி எனலாம். சிங்கப்பூரின் தமிழ்ச் சமூகத்தினர் உள்ளூர் கலாசாரங்களை அரவணைத்து அவற்றோடு ஒன்றிணைந்து வாழ்ந்து வந்திருப்பதால், உலகத் தமிழர்களில் தனித்துவமிக்க அடையாளத்தைக் கொண்டுள்ளனர். அடிப்படையில் காலனித்துவத்தால் உருவான தமிழ்ச் சமூகம், இன்று சிங்கப்பூரின் பல இன சமுதாயத்தில் துடிப்புமிக்க அங்கமாகத் திகழ்கின்றது.

இந்தக் கண்காட்சி இரு பகுதிகளாகப் படைக்கப்பட்டுள்ளது. முதல் பாகம், பண்டைக்காலத் தென்கிழக்காசியாவுக்குப் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் நீள்பயணத்தைப் படைக்கிறது. இரண்டாம் பாகம், பலரும் அறியாத 19ஆம் நூற்றாண்டு முன்னோடிகளையும் சிங்கப்பூரில் வாழ்ந்துவந்த பழம்பெரும் தமிழ்க் குடும்பங்கள் சிலவற்றையும் முன்வைக்கிறது. அனைத்துலக அரும்பொருளகங்கள் இரவலாகக் கொடுத்தவற்றோடு, முதல்முறையாக, கலைப்பொருட்களின் முப்பரிமாண ஒளிப்படங்களைக் காட்டும் மின்னிலக்கக் காட்சிகளும் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.