உங்கள் பயணம் ஆரம்பமாகிறது

திரைச்சீலைகள் விலகும் தருணம், இந்திய மரபுடைமை நிலையத்தில் உங்கள் பயணம் ஆரம்பமாகும். நமக்கு நன்கு அறிமுகமான உள்ளூர் நடிகர்களும் நடனமணிகளும் படைக்கும் பல்லூடகக் காணொளி. இக்காணொளியில் முதலாம் நூற்றாண்டில் தொடங்கி 21ஆம் நூற்றாண்டு வரையிலான வரலாற்றை விவரிக்கும் ஐந்து நிரந்தரக் காட்சிக்கூடங்களும் அறிமுகப்படுத்தப்படும். மேலும் தெரிந்து கொள்ள, எங்களோடு இப்பயணத்தை மேற்கொள்ளுங்கள்!

IHC

ஆரம்பகாலத் தொடர்புகள்: தெற்காசியாவுக்கும் தென்கிழக்காசியாவுக்கும் இடையிலான இருவழித்தொடர்புகள்

1ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரை

அற்புதமான பண்டைக்காலச் சிற்பங்கள் நிறைந்த இந்தக் காட்சிக்கூடம், தெற்காசிய கலாசாரத்திற்கும் தென்கிழக்காசிய கலாசாரத்திற்கும் இடையில் பல நூற்றாண்டுகளாக நிலவிவரும் வியப்பூட்டும் பன்மயத் தொடர்புகளை விவரிக்கிறது.

அக்காலச் சமய நம்பிக்கைகளுக்கும் கடற்பயணப் பாதைகளுக்கும் இடையிலான சந்திப்புகள், கலாசாரப் பரிமாற்றங்கள் போன்றவற்றை இந்தக் கண்காட்சி எடுத்துக்காட்டுகிறது.

IHC

வேர்களும் பாதைகளும்: தொடக்கங்களும் புலம்பெயர்வும்

19ஆம் நூற்றாண்டு முதல் 21ஆம் நூற்றாண்டு வரை

இரண்டாவது காட்சிக்கூடத்தில் செட்டிநாட்டு இல்லத்தின் பிரம்மாண்டமான வாசல் உங்களை வரவேற்கும். மனித உருவங்களும் சமயச் சின்னங்களும் நுட்பமாகச் செதுக்கப்பட்ட அற்புதமான மரக்கதவைத் தாண்டி உள்ளே நுழைந்து, அக்காலத்தில் புலம்பெயர்ந்த மக்களின் பன்மயமான தனிப்பட்ட கதைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.

குடியேறிகள், அவர்கள் மேற்கொண்ட பயணம், மொழி, சமய நம்பிக்கைகள், உடைகள், கலை ஈடுபாடுகள், விழாக்கள் அனைத்தையும் காட்சிக்கூடத்தில் காணலாம். கண்ணைக் கவரும் சடங்குபூர்வத் தங்க ஆபரணங்கள், மாணிக்கங்கள், பட்டாடைகள் அனைத்தும் உங்கள் வருகைக்காகக் காத்திருக்கின்றன.

IHC

முன்னோடிகள்: சிங்கப்பூரிலும் மலாயாவிலும் வாழ்ந்துவந்த ஆரம்பகால இந்தியர்கள்

19ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை

ஏழைகளுக்கு வாரிவழங்கிய நவ்ரோஜி ஆர். மிஸ்ட்ரி, சிங்கப்பூரின் முதல் விலங்கியல் தோட்டத்தைத் தொடங்கிய வில்லியம் லாரன்ஸ் சோமா பசப்பா போன்ற முன்னோடிகள் கதைகள் மூன்றாம் காட்சிக்கூடச் சுவர்களை அலங்கரிக்கின்றன. இங்கு, ஆரம்பகால இந்தியக் குடியேறிகளில் சிலரின் வாழ்க்கையையும் சீரிய பங்களிப்புகளையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்ப் பள்ளிகள், ஊடக அமைப்புகள், சமய நினைவுச்சின்னங்கள், சமூக அமைப்புகள் போன்ற முன்னோடி அமைப்புகளின் பங்களிப்புகளையும் இங்கு படைத்திருக்கிறோம்.

இந்தக் காட்சிக்கூடத்தில் உள்ள மற்றொரு சிறப்பம்சம் ஓவியர் நவின் ரவன்சாய்குல் வரைந்த நமது சமூகச் சுவரோவியம். விளம்பரப்பலகை பாணியிலான இந்தச் சுவரோவியத்தில், லிட்டில் இந்தியாவின் சிறப்புவாய்ந்த கட்டடக்கலை அடையாளச் சின்னங்களின் பின்னணியில், லிட்டில் இந்திய சமூக வல்லவர்களின் முகங்களும், நீண்டகால இந்தியத் தொழில்களும் இடம்பெற்றுள்ளன.

IHC

சிங்கப்பூர், மலாயா இந்தியர்களின் சமூக, அரசியல் எழுச்சி

20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி

காலனித்துவ ஆட்சிக்கு எதிராக இந்தியா ஏகிலும் தலையெடுத்துவந்த தேசியவாத இயக்கங்கள், சிங்கப்பூருக்கும் மலாயாவுக்கும் பரவின. இந்த இயக்கங்களின் விளைவுகளை நான்காவது காட்சிக்கூடம் ஆராய்கிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உள்ளூர் இந்தியச் சமூகத்தில் ஏற்பட்ட தாக்கங்கள், தமிழவேள் கோ. சாரங்கபாணி போன்ற முக்கிய சமூகத் தலைவர்கள் வழிநடத்திய சீர்திருத்த இயக்கங்கள் ஆகியவையும் இங்கு ஆராயப்படுகின்றன.

IHC

தேசத்தின் உருவாக்கம்: சிங்கப்பூர் இந்தியர்களின் பங்களிப்புகள்

1950களின் பிற்பகுதி முதல் தற்போது வரை

“எனது தலைமுறையினர் சிங்கப்பூரர்களாக வாழ்க்கையைத் தொடங்கவில்லை. நான் மலாக்காவில் பிறந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டி‌‌ஷ் பிரஜையாக என் வாழ்க்கையைத் தொடக்கினேன். ஆனால் எங்களது பிள்ளைகள் அனைவரும் சிங்கப்பூரர்கள். அவர்கள் தங்களை சிங்கப்பூரர்களாக நினைக்கின்றனர், சிங்கப்பூரர்களைப் போல் நடந்து கொள்கின்றனர், சிங்கப்பூரர்களைப் போல் உண்கின்றனர், வாழ்கின்றனர்,” – தேவன் நாயர்

நம் சமுதாயத்தின் பல கலாசாரத் தன்மைக்கும் திறமைக்கு அங்கீகாரமளிக்கும் இயல்புக்கும் மட்டுமல்லாது, பல்வேறு துறைகளிலும் தொழில்களிலும் பல்வேறு வழிகளில் நாட்டு நிர்மாணத்திற்கும் பங்களித்துள்ள எண்ணற்ற இந்தியச் சமூகத்தினருக்கு இறுதி காட்சிக்கூடம் மரியாதை செலுத்துகிறது.

எதிர்காலக் கண்ணோட்டத்துடன் நமது அண்மைக்கால வரலாற்றைப் பின்னோக்கிப் பாருங்கள்.

கண்காட்சி காட்சிப்பொருட்கள் மேலும் காண
கீர்த்திமுகன் முகக்கவசம் (மகிமை முகம்) 19ஆம் நூற்றாண்டு தென்னிந்தியா
முக்கோணக்கூம்பு, 19ஆம் நூற்றாண்டு, கேரளா, தென்னிந்தியா
ஃபிரம்ரோஸ் ஏரேட்டட் வாட்டர் சின்னம் கொண்ட ஒரு ஜோடி சோடா புட்டிகள், 20ஆம் நூற்றாண்டு, சிங்கப்பூர்
இது போன்ற நிகழ்ச்சிகள்
வழிகாட்டிச் சுற்றுலாக்கள்

நாங்கள் நடத்தும் இலவச வழிகாட்டிச் சுற்றுலாக்களில் ஒன்றில் சேர்ந்து அக்காலத்திற்குப் பயணம் மேற்கொள்ளுங்கள்.எங்கள் வழிகாட்டியின் துணையுடன், காட்சிக்கூடங்களுக்குத் தகவலளிக்கும் கல்வி ஆய்வுகள் பற்றியும் கலைப்பொருட்கள் பற்றியும் நீங்கள் மேலும் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

வழிகாட்டிச் சுற்றுலாக்கள்
தினமும், வெவ்வேறு நேரங்கள்
இந்திய மரபடைமை நிலையம்
நுழைவு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்

செவ்வாய் முதல் ஞாயிறு வரை நாங்கள் நடத்தும் இலவச வழிகாட்டிச் சுற்றுலாக்களில் கலந்துக்கொள்ளுங்கள். சுற்றுலாக்கள் ஆங்கிலம், தமிழ், மண்டரின் மொழிகளில் நடத்தப்படும்.