

P கிருஷ்ணன் அன்பளிப்பாக வழங்கியது
P கிருஷ்ணனின் இந்தத் தனிப்பட்ட கலைப்பொருள், 2020ஆம் ஆண்டு இந்திய மரபுடைமை நிலையத் திரட்டுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
புதுமைதாசன் எனும் புனைப்பெயரில் பலரும் அறிந்த P கிருஷ்ணன், ஒரு திறமையான எழுத்தாளர், கவிஞர், நாடகாசிரியர், வானொலி படைப்பாளர். இவரின் அரும் பங்களிப்புகள் இலக்கியத் துறையில் அழியா இடம்பெற்றுள்ளன. 1953ல், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தைத் தொடங்கிவைத்த உறுப்பினர்களில் ஒருவராக இவர் முக்கிய பங்காற்றினார். தமிழ் இலக்கியத்தை வளர்ப்பதில் இவருக்குள்ள கடப்பாட்டுக்கு அது ஒரு முக்கிய சான்று. அதன்பின்னர், 1954ல், முன்னேற்றம், சிந்தனை ஆகிய தமிழ் சஞ்சிகைகளின் உதவி ஆசிரியராக அவர் பொறுப்பேற்றார். 1962ல், சிங்கப்பூர் வானொலி தொலைக்காட்சி நிலையத்தில் (RTS) சேர்ந்து புதிய அத்தியாயத்தைத் தொடங்கினார்.
அவர் அந்நிலையத்தில் பணியாற்றிய காலத்தில், மேடைக்கும் வானொலிக்கும் தொலைக்காட்சிக்கும் 500க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள் எழுதினார். ஷேக்ஸ்பியர், பைரான், கீட்ஸ், ஜார்ஜ் ஆர்வெல் போன்ற இலக்கியப் பிரபலங்களின் ஆங்கிலப் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்த முதல் உள்ளூர் எழுத்தாளரும் இவரே. 1992ஆம் ஆண்டின் தேசிய தின விருதளிப்பில் இவருக்குச் செயல்திறன் பதக்கமும், 2008ஆம் ஆண்டில் கலாசார விருதும் கிடைத்தன.


சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தின் திரட்டு
இந்தியக் காப்பியமான மகாபாரதத்தில் அரவான் ஒரு சிறிய கதாபாத்திரம். திரௌபதியின் தமிழ் வழிபாட்டு மரபு பக்தர்கள் அரவானை வழிபடுவர்.
பாண்டவ இளவரசர் அர்ஜுனனுக்கும் நாக இளவரசி உலுப்பிக்கும் பிறந்த அரவான், பதினெட்டு நாள் நடந்த குருட்சேத்திரப் போரில் பாண்டவர்கள் வெற்றி பெற காளியின் அருள் வேண்டி காளியம்மனுக்குத் தன்னைப் பலிகொடுத்தார்.
அரவான் இறப்பதற்குமுன் கிருஷ்ண பகவானிடம் மூன்று வரங்கள் பெற்றதாகத் தமிழ் மரபு கூறுகிறது. குருட்சேத்திரப் போரின் எட்டாவது நாளில் மரணமடைந்த பிறகும் போரைத் தொடர்ந்து பார்க்கவேண்டும் என்பது அரவான் கேட்டுப்பெற்ற வரங்களில் ஒன்று. அரவானின் இந்த அம்சத்தைத்தான் திரௌபதியின் தமிழ் வழிபாட்டு மரபு கொண்டாடுகிறது. தீமிதித் திருவிழாவுக்கு முன்பும் திருவிழாவின்போதும் அரவானின் வெட்டுப்பட்ட சடங்குபூர்வ தலை வழிபடப்படுகிறது; குருட்சேத்திரப் போரை அரவான் நேரில் பார்த்த தருணம் திருவிழாவில் ஒரு சடங்காக நடைபெறுகிறது.
தூக்கிச்செல்லக்கூடிய, சாயமடிக்கப்பட்ட மரப்பலகைமீது தலை வைக்கப்பட்டிருப்பது வழக்கம். பெரும்பாலான திரௌபதி கோயில்களில் அரவானுக்கென தனிச் சந்நிதியும் உள்ளது. சிங்கப்பூரிலுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நிரந்தரமான சந்நிதியும் புறப்பாட்டுச் சிலையும் நிறுவப்பட்டுள்ளன. ஸ்ரீ மாரியம்மன் கோயில் இந்தப் பல்வண்ண உருவத்தை மாற்றியபிறகு, இதனை 1990ல் சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்திற்கு நன்கொடையாக வழங்கியது.
roots.gov.sg செல்

எலிசபெத் மேத்யூ அன்பளிப்பாக வழங்கியது
கேப்டன் ஜான் ஜேகப் இரண்டாம் உலகப் போரின்போது இந்திய தேசிய ராணுவத்தின் தற்கொலைப் படையில் சேர்ந்தார். ராணுவத்தின் அதிகாரிகளுக்கான பயிற்சிப் பள்ளியிலும் உளவுப் பிரிவிலும் கூட அவர் சேர்ந்திருந்தார்.
போருக்குப் பிறகு முன்னாள் இந்திய தேசிய ராணுவக் குழு, நேத்தாஜி நினைவு நூலகம், நேத்தாஜி ஹிந்தி உயர்நிலைப் பள்ளி, தக்ஷினா பாரத ஹிந்தி பிரச்சார் சபா, நேத்தாஜி ஆய்வுக் கழகம், இந்தியச் சமூகநல இல்லம், ஊழியர் கல்விச் சங்கம் ஆகியவற்றில் உறுப்பினரானார். பிற்பாடு, க்ரோனிக்கல் ஆங்கிலச் செய்தித்தாளிலும், உணவுக் கட்டுப்பாடு மற்றும் SIB அதிகாரியாகவும் அவர் வேலை செய்தார்.
கேப்டன் ஜான் ஜேகப் தனது இறுதி மூச்சு வரை இந்திய தேசிய ராணுவத்தின் பேச்சாளராகத் தொடர்ந்து செயல்பட்டார். தனது ஆயுட்காலத்திலேயே இந்திய மரபுடைமை நிலையத்தில் காட்சிப்படுத்த தனது ராணுவச் சீருடையை நன்கொடையாக வழங்க முன்வந்தார்.
roots.gov.sg செல்

இதுபோன்ற பீங்கான் 16ஆம் நூற்றாண்டிலிருந்து தயாரிக்கப்படுகிறது. சிங் அரசாட்சி சீனாவில் ஆட்சிபுரிந்த 18ஆம் நூற்றாண்டில் இது பிரபலமடைந்தது. பாரசீகம், இந்தியாவின் முஸ்லிம் அரசவைகள், இந்தோனீசியா போன்ற இடங்களில் இவை காணப்பட்டன.
இஸ்லாமியப் பாரம்பரியத்தில் “குணப்படுத்தும் கிண்ணம்” எனக் குறிப்பிடப்படும் இந்த பீங்கான் கிண்ணத்தில், கறுப்பு நிறத்தில் குர்ஆனின் அரபுமொழி வரிகளும், அந்த வரிகளுக்கு இடையிடையே சிவப்பு அரக்குச்சாய வடிவமும் இடம்பெற்றுள்ளன. நடுவில் ஒரு “மந்திரச் சதுரம்” உள்ளது. இந்தக் கிண்ணத்திலிருந்து பானம் பருகுவோரைக் குணப்படுத்தும் சக்தி அந்தச் சதுரத்திற்கு இருப்பதாக நம்பப்படுகிறது.
இந்தக் கிண்ணத்தின் பாணி, வட்டமான அல்லது இலைவடிவிலான விளம்புகள் கொண்ட பாரம்பரிய சீன பீங்கான் கிண்ணங்களின் வடிவத்தை, பாரசீக அரக்குச்சாய எழுத்தோவிய மையுடன் ஒருங்கிணைக்கிறது.
roots.gov.sg செல்

V L N சுப்பையா செட்டியார் மற்றும் குடும்பத்தார் இரவலாகக் கொடுத்தது
சிங்கப்பூரில் வட்டித்தொழில் நடத்திய ஆரம்பகால நாட்டுக்கோட்டை செட்டியார்களில் ஒருவர் நாச்சியப்ப செட்டியார். அவரது குடும்பத்தினரின் திரட்டிலுள்ள அறைகலன், கருவிகள், துணைப்பொருட்கள் இவை. இந்தக் கைப்பேட்டியில் கடனுறுதிச் சீட்டுகள், கடன் பத்திரங்கள், மரப்பலகையிலான அளவுகோல் போன்ற கருவிகள் ஆகியவை பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்திருக்கும். இந்தப் பெட்டியில் பூட்டு இருப்பதால் கித்தான் பணப்பையும் இதில் வைக்கப்பட்டிருந்திருக்கலாம்.
சிங்கப்பூருக்கு வந்த ஆரம்பகால செட்டியார்கள், கடனும் வங்கிச் சேவைகளும் வழங்கி சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சிக்குப் பெருமளவு பங்களித்தனர். அவர்களில் பெரும்பாலோர் மார்க்கெட் ஸ்திரீட்டில் இருந்த கடைவீடுகளில் தொழில் நடத்தினர். ஒரு கடைவீட்டைப் பலர் பகிர்ந்துகொள்வது வழக்கம். அந்த வீட்டில் ஒவ்வொருவரும் தனித்தனி பணிமேசைகள் வைத்திருப்பர்.


இந்திய மரபுடையை நிலையம் 2016ல் முதல்முறையாக நடத்திய “முன்பொரு காலத்தில் லிட்டில் இந்தியாவில்” கண்காட்சிக்காகப் பொறுப்பளிக்கப்பட்டதன் பேரில் நவின் ராவன்சாய்குல் “லிட்டில் இந்தியாவுக்குச் செல்லும்வழி” ஓவியத்தை வரைந்தார்.
சிங்கப்பூரின் லிட்டில் இந்தியாவில் ஓவியர் சந்தித்தவை, கண்டறிந்தவை அனைத்தையும் இந்த ஓவியம் தொகுத்தளிக்கிறது. இந்த வட்டாரத்தின் மாறிக்கொண்டே இருக்கும் அவதாரங்களும், அக்கால, இக்கால மக்களும் ஓவியத்தின் படர்ந்த தோற்றத்தில் ஆங்காங்கே தென்படுகின்றனர். ஆரம்பகால மண்டோர்கள், தொழிலதிபர்கள், பட்டத்தொழிலர்கள் ஆகியோருடன் இக்காலக் கடைக்காரர்களும் சுற்றுப்பயணிகளும் காணப்படுகின்றனர்.
விளம்பரப்பலகை பாணியில் தீட்டப்பட்ட இந்த ஓவியம், ராவன்சாய்குலின் இந்தியத் திரைப்படத்துறை மீதான ஈர்ப்பை வெளிப்படுத்துகிறது. பன்னிரண்டு மீட்டர் நீளமான இந்த ஓவியத்தில், வெவ்வேறு வடிவங்களிலும் அளவுகளிலும் 130 பாகங்கள் உள்ளடங்கியுள்ளன.


ஷஷிகலா சமுகம் நாதன் மற்றும் சந்திரகலா குணசீலன் அன்பளிப்பாக வழங்கியது
M V குருசாமி 1920ஆம் ஆண்டு சிரம்பானில் பிறந்தார். மிருதங்க வித்வானான அவர், சிங்கப்பூரில் புகழ்பெற்ற தாளவாத்திய ஆசிரியராகவும் இருந்தார். சிங்கப்பூருக்கு வந்த அவர், இங்குள்ள இந்திய செவ்விசைத் துறையில் ஈடுபாடு கொண்டார். அப்போதைய கலாசார அமைச்சர் S ராஜரத்தினம் வழிநடத்திய கலாசாரக் குழுவில் அவர் இடம்பெற்றிருந்தார். அந்தக் குழு, 1965ல் சரவாக், புருணை, சாபா போன்ற வட்டாரங்களிலிருந்த பல்வேறு நிலையங்களுக்குச் சென்று இசைநிகழ்ச்சி படைத்தது. அவருக்குப் பல்வேறு விருதுகளும் கிடைத்தன. அவற்றுள் ஒன்று, சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம் 1986ல் வழங்கிய கலாரத்னா விருது.
M V குருசாமியின் மிருதங்கத்தை அவரது மகள்கள் இந்திய மரபுடைமை நிலையத்திற்கு நன்கொடையாக வழங்கினர்.
roots.gov.sg செல்

கிர்பா ராம் விஜ் நிர்வாகச் சேவை அதிகாரியாகத் தமது சீரிய வாழ்க்கைப்பணியைத் துவங்கினார். தற்காப்பிலும் அரசதந்திர உறவிலும் அவர் நீங்கா தடம்பதித்தார். அவர் 1965ல் சிங்கப்பூர் ஆயுதப்படைப் பயிற்சிக் கழகத்தின் (SAFTI) முதல் இயக்குநராகப் பதவியேற்று தமது சேவைப்பயணத்தைத் தொடங்கினார். அதற்குமுன், சிங்கப்பூர் தொண்டூழிய பீரங்கிப்படையில் பயிற்சி அதிகாரியாகத் தனது திறனை வெளிப்படுத்தி, பெருமைக்குரிய “கௌரவ வாளை” 1960ல் பெற்றார். இந்தோனீசியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான கொன்ஃபிரன்டாசி மோதலின்போது விஜ் ஆற்றிய கடப்பாடுமிக்கச் சேவைக்காக, 1963ல் அவருக்கு பிங்காட் ஜாசா கெமிலாங் (பாராட்டுப் பணிப் பதக்கம்) வழங்கப்பட்டது.
சிங்கப்பூர் ஆயுதப்படைப் பயிற்சிக் கழகத்தின் இயக்குநராக, கழகத்தை நிலைநிறுத்துவதில் அவர் முக்கிய பங்காற்றினார். புதிய வீரர்களுக்குப் பயிற்சியளிக்க இஸ்ரேலுடன் முக்கியமான பங்காளித்துவத்தையும் அமைத்தார். மேலும், யூகோஸ்லாவியா, பாகிஸ்தான், லெபனான் ஆகியவற்றுக்கான தூதரகப் பொறுப்புகளுடன் 1975 முதல் 1979 வரை எகிப்துக்கான தூதராகப் பதவி ஏற்றிருந்தபோது தனது சீரிய திறனையும் அரசதந்திரப் புத்திகூர்மையையும் வெளிப்படுத்தினார்.


சதோனாதேவி குணரத்தினம் இரவலாகக் கொடுத்தது
அன்னரத்தினம் குணரத்தினம் தென்கிழக்காசியாவின் முதல் இந்தியப் பெண் சிற்பிகளில் ஒருவர். சிங்கப்பூர்க் கலைச் சங்கத்திலும் அவர் ஆரம்பகால உறுப்பிராக இருந்தார்.
உருவச்சிலை வடிக்கும் துறையில் முக்கிய கலைஞராக விளங்கிய அவர், பொறுப்பளிப்புகளின் மூலம் இந்தக் கலையில் ஈடுபட்டார். மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர் போன்ற பிரமுகர்களின் சிலைகளையும் இவர் தடித்தார். அவை சிங்கப்பூரிலுள்ள ராமகிருஷ்ணா மிஷனுக்குப் பரிசளிக்கப்பட்டன.
அன்னரத்தினம் குணரத்தினம் கலைக்கல்வித் துறையிலும் முக்கிய பங்காற்றினார். கோலாலம்பூரில் இருந்த மெத்தடிஸ்ட் பெண்கள் பள்ளியில் அவர் கலை கற்பித்தார். 1948 முதல் 1968 வரை இராஃபிள்ஸ் பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் கலைத்துறை தலைவராகப் பொறுப்பாற்றினார். முன்கூட்டியே பணி ஓய்வு பெறுவதற்கு முன்பாக, பீட்டி உயர்நிலைப் பள்ளியில் பையன்களுக்கும் கலை கற்பித்தார்.